ஆகுபெயரின் வகைகள் 

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகை இயற்பெயர்களும் அவற்றோடு சம்பந்தமுடைய பிற பொருள்களுக்கு ஆகிவரும்போது, ஆகு பெயர்கள் அடிப்பைடயில் ஆறு வகைப்படும். இவற்றின் விரிவு பதினாறாகும். 

01. பொருளாகு பெயர் 

உதாரணம்

  • மேனகா மல்லிகை சூடினாள்.

இங்கே 'மல்லிகை' என்பது கொடியின் (பொருளின்) பெயராகும். மேலுள்ள வாக்கியத்தில் அதன் பூவிற்கு (சினைக்கு) ஆகி வருகிறது. இவ்வாறு பொருளின் பெயர் அதனது சினைக்கு ஆகி வருமாயின் அது பொருளாகு  பெயர் எனப்படும்.

02. இடவாகு பெயர் 

உதாரணம்

  • ஊர் அடங்கியது.

மேலுள்ள வாக்கியத்தில் ஊர் என்னும் இடப்பெயர் அங்கிருக்கின்ற மக்களுக்கு ஆகி வருவதால் அது இடவாகு பெயர் எனப்படுகிறது.

03. காலவாகு பெயர்

உதாரணம்

  • கார்த்திகை பூத்தது.

இங்கு கார்த்திகை என்னும் காலப்பெயர், அக்காலத்தில் பூக்கும் காந்தள் செடிக்கு ஆகி வருவதால் காலவாகு பெயர் ஆயிற்று.

04. சினையாகு பெயர் 

உதாரணம்

  • தோட்டத்திலே தேயிலை நட்டனர்.

தேயிலை என்னும் சினைப்பெயர் அதன் முதலாகிய செடிக்கு ஆகி வருகின்றது. இவ்வாறான ஆகுபெயர் சினையாகு பெயர் எனப்படும்.

05. குணவாகு பெயர் 

உதாரணம் 

  • அனைவருக்கும் இனிப்பு வழங்கினேன்.

இனிப்பு எனபது சுவையாகிய குணத்தைக் குறிக்கும். ஆனால் இங்கு இனிப்பு என்பது அக்குணத்தையுடைய பொருளுக்கு ஆகி வருவதால் குணவாகு பெயர் எனப்படுகிறது.

06. தொழிலாகு பெயர் 

உதாரணம் 

  • கமலாவுடன் பொரியல் உண்டேன்.

பொரியல் என்னும் தொழிலின் பெயர் அத்தொழிலால் கிடைத்த உணவிடற்கு ஆகி வருவதால் இது தொழிலாகு பெயராயிற்று.

07. எண்ணலளவை ஆகுபெயர் 

உதாரணம் 

  • ஒன்று கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.

இவ்வாக்கியத்தில் ஒன்று என்ற எண்ணுப்பெயர் ஒரு தரம் ஆகிய அடித்தலைக் குறிப்பதாக அமைவதால் இது எண்ணலளவை ஆகுபெயர் எனப்படுகிறது.

08. எடுத்தலளவை ஆகுபெயர்

உதாரணம் 

  • இரண்டு கிலோ வாங்கினேன்.

இங்கு கிலோ என்னும் எடுத்தலளவை பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆவதால் எடுத்தலளவை ஆகுபெயர் எனப்படுகிறது. 

09. முகத்தலளவை ஆகுபெயர் 

உதாரணம் 

  • விளக்கு எரிய ஒரு லிட்டர் போதும்

இங்கு லிட்டர் என்ற முகத்தல் அளவை பெயர் எண்ணெயைக் குறிக்கிறது. அதாவது முகத்தல் அளவைப்பெயர் தொடர்புடைய பொருளைக் குறிக்கின்றது.

10. நீட்டலளவை ஆகுபெயர் 

உதாரணம் 

  • உடுப்பது நான்கு முழம்.

இவ் வாக்கியத்திலே முழம் என்னும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவுடைய துணிக்கு ஆகி வருவதால் நீட்டலளவை ஆகுபெயர் எனப்படுகிறது.

11. சொல்லாகு பெயர் 

உதாரணம் 

  • இந்தப் பாட்டு சிந்தனையை தூண்டுகிறது.

இங்கு பாட்டு என்ற சொல் பாட்டினுடைய பொருளைக் குறிப்பதால் இது சொல்லாகுபெயர் ஆயிற்று. அதாவது சொல் அதன் பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

12. தானியாகுபெயர் 

உதாரணம் 

  • அடுப்பிலிருந்து சோற்றை இறக்கு.

இங்கு சோறு என்பது அது இருக்கின்ற பாத்திரத்தைக் குறிக்கின்றது. அதாவது இடத்தில் உள்ள பொருளின் பெயரால் அழைக்கப்படுகின்றது. இங்கு தானி எனப்படுவது இடத்தைக் குறிக்கின்றது.

13. கருவியாகு பெயர் 

உதாரணம் 

  • புதுமைப் பித்தனின் எழுத்து ஆற்றல் மிக்கது.

எழுத்து என்ற கருவியின் பெயர் அந்த கருவியால் ஆக்கப்பட்ட சிறுகதையைக் குறிக்கின்றது. கருவியின் பெயர் கருவியால் ஆக்கப்பட்ட பொருளைக் குறிக்கும்.

14. காரியவாகு பெயர்  

உதாரணம் 

  • எழுத்தாளர் தரமான இலக்கியங்களைப் படைக்க வேண்டும்.

இங்கு தரமான இலக்கியம் என்ற காரியத்தின் பெயர் கருவியாகிய நூல்களைக் குறிக்கின்றது. அதாவது காரியத்தின் பெயர் கருவியைக் குறிக்கின்றது.

15. கருத்தாவாகு பெயர் 

உதாரணம் 

  • கல்கி படித்தேன்.

செய்தவன் பெயராலேயே செய்யப்பபட்ட பொருளும் ஆகி வருவது கருத்தாவாகு பெயர் எனப்படும். மேலுள்ள வாக்கியத்தில் கல்கி என்ற எழுத்தாளன் தொடங்கிய பத்திரிகை கருத்தாவாகிய அவர் பெயராலேயே அழைக்கப்படுகின்றது.

16. உவமையாகு பெயர் 

உதாரணம் 

  • சிங்கம் வந்தான்.

இங்கு உவமானத்தின் பெயரால் உவமேயத்தைக் குறிப்பது  உவமையாகு பெயர் எனப்படும். வாக்கியத்தில் சிங்கம் என்ற உவமானம் வீரனாகிய உவமேயத்தைக் குறிக்கின்றது.