பாடநூல் வினா-விடை

நம்மை அளப்போம்- பலவுள் தெரிக

1. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.

அ) மல்லார்மே - யுகத்தின் பாடல்

ஆ) இன்குலாப் - ஒவ்வொரு புல்லையும்

இ) ஸ்டெஃபான் மல்லார்மே - புல்லின் இதழ்கள்

ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதைமொழியும்

அ) அ, ஆ

ஆ) அ, ஈ

இ) ஆ, ஈ

ஈ) அ, இ

விடை : இ) ஆ, ஈ

2. “கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்" - அடி மோனையைத் தெரிவு செய்க.

அ) கபாடபுரங்களை - காவுகொண்ட

ஆ) காலத்தால் - கனிமங்கள்

இ) கபாடபுரங்களை - காலத்தால்

ஈ) காலத்தால் - சாகாத

விடை : இ) கபாடபுரங்களை - காலத்தால்

3. “மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" எனக் கூறியவர்

அ) வால்ட் விட்மன்

ஆ) எர்னஸ்ட் காசிரர்

இ) ஆற்றூர் ரவிவர்மா

ஈ) பாப்லோ நெரூடா

விடை : இ) ஆற்றூர் ரவிவர்மா

4. “ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைந்துவிடுகிறது." இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.

அ) மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்.

ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.

இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.

ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.

விடை: இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.

6.மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.

அ) அன்னம், கிண்ணம்

ஆ) டமாரம், இங்ஙனம்

இ) ரூபாய், லட்சாதிபதி

ஈ) றெக்கை, அங்ஙனம்

விடை : அ) அன்னம், கிண்ணம்

குறிவினா

1.பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?(Mar.-24)

எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது.

* எனவே, எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

2. என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே! 

வழிவழி நினதடி தொழுதவர்,

 உழுதவர், விதைத்தவர்,

 வியர்த்தவர்க்கெல்லாம்

நிறைமணி தந்தவளே! - இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.

தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்.

3."நீளும் கைகளில் தோழமை தொடரும்

நீளாத கைகளில் நெஞ்சம் படரும்" - தொடைநயங்களை எடுத்தெழுதுக.

அடிதோறும் முதற்சீரில் முதலெழுத்து ஒன்றி வருவது, அடிமோனை. - (நீளும், நீளாத)

இரண்டாம் அடியில் 'நீளாத நெஞ்சம்' எனச் சீர்மோனை அமைந்துள்ளது.

* அடி இயைபு (தொடரும், படரும்) என்னும் தொடைகள், இவ்வடிகளில் நயம்பட அமைந்துள்ளன.

அடிதோறும் முதல் சீர் சொல்லாலும் பொருளாலும் முரண்பட்டு (மாறுபட்டு) வருவது அடிமுரண் தொடை.(நீளும், நீளாத)

4. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் -இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?

* உயிரெழுத்து (த் + உ), பன்னிரண்டு (ட் + உ); உயிர்எழுத்து (குற்றியலுகர) ஈறு.

* திருக்குறள், நாலடியார் - மெய்எழுத்து ஈறு.

6.இனம்,மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக?

 “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை"

சிறுவினா

1.சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

* பல தலைமுறை கடந்தும் தனது திருவடிகளைத் தொழச் செய்தவள்.

தமிழ்ப்பயிர் தழைத்தோங்கக் காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்து, நிறைமணி தந்தவள். தமிழ் மொழியாகிய வயலினை அறிவு கொண்டு உழுது, நற்கருத்துகளை விளைவித்துத் தமிழ் நிலத்தில் ஊன்ற உதவியவள்.

* தொன்மையான கபாடபுரங்களைப் பலிகொண்ட பிறகும், காலத்தால் அழியாத செல்வங்களின் வலிமை சேரச் செய்தவள். ஏடு தொடக்கி வைத்து, விரலால் மண்ணில் தீட்டித்தீட்டி எழுதக் கற்பித்தவள். அத்தகைய தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்.

* ஆதலால், ஒலிக்கும் கடலையும், நெருப்பாற்றையும், மலை உச்சிகளையும் காற்றில் ஏறிக் கடந்துசெல் என்னும் பாடலைப் பாடத்தான் வேண்டும் என்கிறார் சு. வில்வரத்தினம்.

2. கவிதை ஒரு படைப்புச் செயல்பாடு என்பதை விளக்குக.

மொழி என்பது கருத்தைப் பரிமாறிக் கொள்ள உதவும் கருவி. எனினும் அது அன்பையும், இரக்கத்தையும், ஆன்மிகத்தையும் விளக்கும்போது உணர்வுகளை வெளிப்படுத்தக் கவிதை என்னும் படைப்பாக மாறுகிறது.

உடம்பின்மேல் தோல்போல் இயங்கும் மொழி, எழுத்து மொழியாகும்போது, கவிதை உணர்வை வெளிப்படுத்துகிறது. கவிதையில் ஒவ்வொரு சொல்லும் மற்றொன்றைவிட முக்கியமானதாகி விடும். சிலரது பேச்சு மொழியிலும் கவிதை நடனமிடும். ஆகவே, படைப்புச் செயல்பாட்டில் மொழி கவிதையாகிறது.

3. இன்குலாப், “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்” எனக் கூறுவதன் நயத்தை விளக்குக.

கைகள் நீளும்போது, தோழமை தொடர வாய்ப்பு உண்டு.

ஆனால், நீளாத கையிலும், நெஞ்சத்தைப் படரவிட வேண்டும்.

இந்த உலகம், பெருங்கடல் போன்றது. இது, எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது.

இந்த உலகக் கடலில் நானும் ஒரு துளியாக இருப்பதால், உலகிற்கு நானும் தேவைப்பட்டவனாவேன். 

“மனிதக் கடலில் நானும் ஒரு துளியாக இருக்கிறேன்” என்பதை, இன்குலாப் நயம்படக் கூறுகிறார்.

4. 'என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.

எனக்கு உயிர் தந்தவள் தாய். தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய ஊட்டி வளர்த்த மொழி தமிழ். அது என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளமான மொழியைக் கற்றபோது, மொழியின் வளத்தோடு வீச்சும், ஆழமும் புரிந்தது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று, என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளை அப்போதுதான் புரிந்துகொண்டேன்.

தொடர்ந்து "தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று, நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொருள் தெளிந்தேன்.

* அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.

5. மொழிமுதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.

மொழிமுதல் எழுத்துகள் :

பன்னிரண்டு உயிர்எழுத்துகளும், க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் என்னும் பத்து மெய்யெழுத்துகள் உயிரெழுத்துகளோடு சேர்ந்தும் மொழிக்கு முதலில் வரும்.

எ கா : அன்பு (அ), ஆடு (ஆ), இலை (இ) ஈகை (ஈ) உரல் (உ), ஊசி (ஊ) எருது (எ), ஏணி (ஏ) ஐந்து (ஐ) ஒன்று (ஒ) ஓணான் (ஓ) ஔவை (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

* (க்+அ) கலம், (ங்+அ) ஙனம், (ச்+அ) சங்கு, (ஞ்+அ) ஞமலி, (த்+அ) தமிழ், (ந் +அ) நலம், (ப்+அ) பழம், (ம்+அ) மலர், (ய்+அ) யவனம், (வ்+அ) வளம் என, மெய் எழுத்துகள் பத்தும் மொழிக்கு முதலில் வரும்.

மொழிக்கு இறுதி எழுத்துகள் :

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொரு மெய்யெழுத்துகளும், (கு, சு, டு, து, பு, று என்னும்) குற்றியலுகரம் ஒன்றும் ஆக இருபத்து நான்கு எழுத்துகள், மொழிக்கு இறுதியில் வரும்.

எ கா : பல (அ), பலா (ஆ), கிளி (இ), தேனீ (ஈ), தரு (உ), பூ (ஊ), (எ), ஒரே (ஏ), தளை (ஐ), நொ (வருந்து) (ஒ), பலவோ (ஓ), வௌ (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு இறுதியில் வரும்.

உரிஞ் (ஞ்). மண் (ண்), வெரிந் (ந்), பழம் (ம்), அறன் (ன்), மெய் (ய்), வேர் (ர்), வேல் (ல்), தெவ் (வ்), தமிழ் (ழ்), வாள் (ள்) என, மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழிக்கு இறுதியில் வரும்.

பாக்கு (கு), பஞ்சு (சு), எட்டு (டு), பந்து (து), சால்பு (பு), கயிறு (று) எனக் குற்றியலுகர எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.

நெடுவினா

1. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்துமொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.(Mar.- 20,24, May-22)

பேச்சு மொழி என்பது, திரவநிலையில் இருந்து நம் விருப்பத்திற்குக் கையாளவும், உணர்வுகளை வெளி ப்படுத்தவும், பிறரை உணரச் செய்யவும் துணைபுரிகிறது. எழுத்தாகப் பதிவு செய்யப்படும் மொழி, உறைந்துபோன பனிக்கட்டி போன்று, திடநிலை பெற்றுவிடுகிறது. ஆகவே, கையாள எளிதாக இருப்பதில்லை.

பேச்சுமொழிச் சிறப்பு :

எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். அதனால் எழுத்து மொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது. எழுத்து மொழியில், அதனைக் கேட்க எதிராளி என, ஒருவரும் இருப்பதில்லை. பேச்சுமொழி அப்படியன்று. எழுத்துமொழியைவிடவும் பேச்சு மொழிக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுதி.

எழுத்துமொழி இயல்பு :

எழுத்துமொழி என்பது, ஒருவகையில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மொழிபோல் தோன்றும்; உறைந்த பனிக்கட்டி போன்ற திடநிலை அடைந்துவிடும். எழுத்து மொழி, விருப்பம்போல் கையாள முடியாததாகி விடுகிறது. எழுத்துமொழி, நேரடிப் பயன்பாட்டிற்கு உதவாததால், வேற்றுமொழி போலாகிவிடுகிறது.

பேச்சுமொழிக் கவிதை

பேச்சுமொழியே ஒரு கவிஞனை நிகழ்காலத்தவனா, இறந்தகாலத்தவனா என, நிர்ணயம் செய்யும் ஆற்றல் உடையது. பேச்சுமொழியில் ஒரு கவிதையைப் படைக்கின்றபோது, அது உடம்பின் ஒரு மேல்தோல்போல் உயர்வுடன் இயங்குகிறது. ஆனால், எழுத்துமொழியில் அதே சொற்கள் அழகுடையதானாலும், உணர்ச்சி இல்லாத ஆடைபோல் போர்த்திக்கொள்ள உதவுகிறது. பேச்சுமொழியை உடனே தாகம் போக்கும் நீர் என்றும், எழுத்துமொழி உறைந்த பனிக்கட்டியானாலும், என்றேனும் ஒருநாள் பயன்தரும் எனவும் நான் உணர்கிறேன்.

2. 'ஒவ்வொரு புல்லையும்' கவிதையில் வெளிப்படும் சமத்துவச் சிந்தனைகளைப் புலப்படுத்துக.

இயற்கை எண்ணற்ற உயிர்களைப் படைத்துள்ளது. படைத்த உயிர்கள் தன்னிடம் சுதந்திரமாக வாழவும் இடமளித்துள்ளது. இந்த வகையில் அனைத்தையும் இயற்கை சமமாகவே கருதுவது புலப்படுகிறது. இயற்கைதான் சமத்துவக் கொள்கையை வகுத்தளித்துள்ளது. இந்தச் சமநிலை, சமத்துவச் சிந்தனை என்பதனை இன்குலாபின் 'ஒவ்வொரு புல்லையும்' என்ற கவிதை கொண்டு நோக்குவோம்.

சமத்துவச் சிந்தனை இருப்பதனால்தான், ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைக்க முடிகிறது. பறவைகளோடு சேர்ந்து விண்ணில் பறக்கவும் எல்லைகளைக் கடக்கவும் முடிகிறது. உலகில் பிற பொருள்களையும் தன்னைப்போல் நினைப்பவராலேயே பெயர் தெரியாதவற்றையும் 'கல்' என்றோ, 'மண்' என்றோ ஒரு பெயரை உரிமையோடு சூட்டி அழைக்க முடிகிறது. அத்துடன் சமத்துவச் சிந்தனை உள்ளத்தில் இருப்பதனால்தான் கை நீட்டவும் உள்ளத்தில் அணைத்துக் கொள்ளவும் இயலுகிறது.

இயற்கை படைத்த பொருள்களும் உயிர்களும் கடல்போல் விரிந்துள்ளதாகக் கொண்டால், அந்தச் சிந்தனையுள்ள எவரும் அதில் ஒரு துளியாக மாறிவிட முடியும். அதனால் சமத்துவச் சிந்தனையில் தன்னை இணைத்துக் கொள்ள முடிகிறது. குயில் என்றால் கூவுவதும், காகம் என்றால் கரைவதும் இயற்கை தந்த வரம். அதை ஏற்கின்றபோது, சிந்தனை சமத்துவமாக நினைத்து அனைத்திற்கும் அடைக்கலம் தரும் எண்ணம் தோன்றிச் செயல்படத் தொடங்குகிறது.

சமத்துவம் புனலாகப் பெருகும்போது, போதி மர நிழலும் சிலுவையும் பிறையும் அதில் ஒன்று கலந்து இயற்கையின் தன்மையைப் புலப்படுத்தும். சமத்துவச் சிந்தனை உள்ள இடத்தில்தான் விசும்பல் என்பது எந்த மூலையில் தோன்றினாலும் அனைத்துச் செவிகளிலும் எதிரொலிக்கும்; தீர்வு கிடைக்கும். கூண்டில் அடைக்கப்பட்ட பறவையின் சிறகில் இரத்தம் சிந்தும்நிலை உருவானால் அனைத்துச் சிறகுகளிலும் அதன் உணர்வு வெளிப்படும். மனிதர்களிடத்தில் இயற்கை கற்பித்த சமநிலை என்பது, சமயம் முதலிய அனைத்தையும் கடந்து விரிவடையும். சுவர் என்னும் தடை இல்லாத சமவெளியாக உருவாகச் சமத்துவம் துணை நிற்கும். அனைத்து முகங்களிலும் மகிழ்ச்சி உருவாகச் சமத்துவம் துணைபுரிகிறது. அதனால் அனைத்திற்கும் மேலாக விளங்கும் உயிரினமான மனிதம் என்பது சமத்துவச் சிந்தனை வளர்ந்த நிலையில் இசையாகப் பாடத் தொடங்குகிறது எனலாம்.

3. சிம்பொனித் தமிழரும், ஆஸ்கர் தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை, நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.

(Mar. -19, 20, 24, Sep.-20)

சாதனை புரிந்த இளையராஜா

சிம்பொனித் தமிழர் :

“ஆசியக் கண்டத்தவர், 'சிம்பொனி' இசைக்கோவையை உருவாக்க முடியாது" என்னும் மேலைநாட்டு இசை வல்லுநர் கருத்தைச் சிதையச் செய்தவர் இளையராஜா. இவர், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்து இராசையா ஆவார். தாலாட்டில் தொடங்கித் தமிழிசைவரை அனைத்தையும் அசைபோட்ட இசை மேதை.

இசையைச் செவியுணர் கனியாக்கியவர் :

திரையுலகில் கால் பதித்த இளையராஜா, இசையில் சிலம்பம் சுழற்றி, மக்களை இசை வெள்ளத்தில் மிதக்க வைத்தவர். பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி, மெல்லிசையில் புது உயரம் தொட்டவர். எழுபது எண்பதுகளில் இவர் இசை, இசை வல்லாரை மட்டுமன்றி, பாமர மக்களையும் ஈர்த்துத் தன்வசப் படுத்தியது.

இசையில் சாதனைப் படைப்புகள் :

ஐவகை நிலப்பரப்பைக் காட்சிப்படுத்தும் இளையராஜாவின் இசை மெட்டுகள், நெடுந்தூரப் பயணங்களுக்கு வழித்துணையாயின. இளையராஜாவின் இசையில், மண்ணின் மணத்தோடு, பண்ணின் மணமும் கலந்திருக்கும். எனவே, இசை மேதைகளால் மதிக்கப்பட்டார்.

'எப்படிப் பெயரிடுவேன்?', 'காற்றைத் தவிர ஏதுமில்லை!' என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள். 'இந்தியா 24 மணிநேரம்' என்னும் குறும்படப் பின்னணி இசை, மனித உணர்வுகளான மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி என்பவற்றை உணர்த்துவன.

இலக்கியங்களை இசையாக்கியவர் :

மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜாவின் 'இரமணமாலை', 'கீதாஞ்சலி', மூகாம்பிகை பக்தி இசைத் தொகுப்பு, மீனாட்சி ஸ்தோத்திரம் ஆகியன என்றென்றும் நிலைத்து நிற்கும். 'பஞ்சமுகி' என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர்

'இசைஞானி' எனப் போற்றப்படும் இளையராஜா, மேற்கத்திய இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். திரை இசைக்கு ஏற்ப உணர்வின் மொழியை மாற்றுவதில் வல்லவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

அரிய செயல் :

தேசத் தந்தை மகாத்மாகாந்தி எழுதிய 'நம்ரதா கே சாகர்' பாடலுக்கு இசை அமைத்து, 'அஜொய் சக்கரபர்த்தி'யைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவிலேயே 'முதல் சிம்பொனி' இசைக்கோவையை உருவாக்கினார். இன்று இளையராஜாவின் இசை ஆட்சி, உலகு முழுவதும் பரவியுள்ளமை தமிழராகிய நமக்குப் பெருமை.

பெற்ற விருதுகள் :

இளையராஜா, தமிழக அரசின் 'கலைமாமணி' விருதைப் பெற்றார்; சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றார். மத்தியப்பிரதேச அரசு அளித்த 'லதா மங்கேஷ்கர்' விருதைப் பெற்றார்; கேரள நாட்டின் 'நிஷாகந்தி சங்கீத விருதை'ப் பெற்றார். இந்திய அரசு, 'பத்ம விபூஷண்' விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. இசையால் உலகளக்கும் இளையராஜாவின் புகழ், காலம் கடந்து நின்று பாராட்டைப் பெறும். வாழ்க இசை ! வளர்க இளையராஜாவின் இசைப்பணி!

தமிழ் இசை உலகில் சாதனைபுரிந்த இரகுமான்

ஆஸ்கர் விருது வென்ற தமிழர் :

2009ஆம் ஆண்டு அமெரிக்க 'கோடாக்' அரங்கில், இசைக்கான 'ஆஸ்கர்' விருதுக்கு, ஐந்துபேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் இரகுமான் பெயரும் இருந்தது.

ஏனைய நால்வர், பலமுறை பரிந்துரை பெற்றவர்கள். எனினும், முதன்முறை பரிந்துரைக்கப்பட்டவர் அரங்கில் ஏறி, இரு கைகளிலும் ஆஸ்கர் விருதுக்கான சிலைகளை ஏந்தி, இறைவனை வணங்கியபின், தன் தாய்மொழியில் உரை நிகழ்த்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

இளமையில் இசையும் படிப்பும் :

மலையாளத் திரைப்பட உலகில் புகழுடன் விளங்கிய தம் தந்தை ஆர். கே. சேகரை எண்ணினார். நான்கு வயதில் தந்தையுடன் ஹார்மோனியம் வாசித்துத் திறமைகாட்டியதை எண்ணினார்.

தந்தையை இழந்த சூழலில் பள்ளிப் படிப்புக்கு இடையூறு ஏற்படாவகையில், இரவெல்லாம் இசைக்குழுவில் பணி செய்து, காலையில் நேராகப் பள்ளி சென்று, வாயிலில் காத்திருக்கும் தாய் தந்த உணவை உண்டு, பள்ளிச் சீருடை அணிந்த காலத்தை நினைத்தார். வாழ்க்கைப் போராட்டம், பதினோராம் வகுப்போடு படிப்பை முடிக்க வைத்தது.

துள்ளல் இசைக்கு ஆட வைத்தவர் :

1992இல் 'ரோஜா' படத்திற்கு இசையமைத்துத் திரை இசைப் பயணத்தைத் தொடங்கினார். தம் இசையால் தமிழ்த் திரையுலகில் புத்தெழுச்சியை ஏற்படுத்தினார். இளைஞர்களிடையே இசை ஆளுமையை வளர்த்தார். இவரது தமிழிசையின் துள்ளல் ஓசைக்கு மயங்காதவர் இலர். இசையின் நுட்பமுணர்ந்து, செம்மையாகக் கையாண்டு இளைஞர்களைத் தம் பாடலுக்கு ஆடவும் பாடவும் வைத்தார்.

இசையில் கணினித் தொழில்நுட்பம் :

கணினித் தொழில்நுட்ப உதவியுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை முறைகளைக் கலந்து, உலகத்தரத்தில் இசை அமைத்தார். இளம் பாடகர்களை அறிமுகப்படுத்தினார்.

இசைப்பாடலின் மெட்டை உருவாக்குமுன், தாளத்தைக் கட்டமைத்துப் பாடலுக்கான சூழலை உள்வாங்கி, அதன்பின் பாட்டை வெளிக்கொணர்வது இரகுமானின் தனிஆற்றல். பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இசையை, மக்களை ஈர்க்கும் வகையில் அமைத்துத் தம் வல்லமையை வெளிப்படுத்துவார்.

உலகக் கலாச்சாரத்தை இசையில் இணைத்தல் :

இவர் இசையமைத்த 'வந்தே மாதரம்', 'ஜனகணமன' இசைத் தொகுதிகள், நாட்டுப் பற்றைத் தூண்டுவன. தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இந்தித் திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு, மேலை நாட்டுப் படங்களுக்கும் நாடகங்களுக்கும் இசையமைத்து, இசையுலகில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார். தம் இசையால் வெவ்வேறு கலாச்சார மக்களை ஒருங்கிணைக்கவும் செய்தார்.

பெற்ற விருதுகள்:

ஏ. ஆர். இரகுமானுக்குத் தமிழக அரசு, 'கலைமாமணி' விருது வழங்கியது. கேரள அரசு, 'தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. உத்திரப்பிரதேச அரசு, 'ஆவாத் சம்மான்' விருதும், மத்தியப் பிரதேச அரசு, 'லதா மங்கேஷ்கர்' விருதும் வழங்கின.

மொரீஷியஸ் அரசும் மலேசியா அரசும், 'தேசிய இசை விருது' வழங்கிச் சிறப்பித்தன. ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகம், 'சர்வதேச இசை விருது' வழங்கிப் பாராட்டியது.

இந்திய அரசு, ‘பத்மபூஷண்' விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திற்கு இசையமைத்து, 'கோல்டன் குளோப்' விருதைப் பெற்று, உலகப் புகழ் பெற்றார்.

இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியராக வலம் வரும் இரகுமானின் வாழ்க்கை, சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குப் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இலக்கணத் தேர்ச்சி கொள்

1. தவறான இணையைத் தேர்வு செய்க.

அ) மொழி + ஆளுமை உயிர் + உயிர்

இ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர்

ஆ) கடல் + அலை - உயிர் + மெய்

ஈ) மண் + வளம் - மெய் + மெய்

விடை : ஆ) கடல் + அலை - உயிர் + மெய்

2.மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?(June-23)

மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் இருபத்திரண்டு. அவை உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்து களில் க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் என்னும் பத்து ஆக இருபத்திரண்டு.

எ - டு

: i) அன்பு, ஆடு, இலை, ஈகை, உரல், ஊசி, எருது, ஏணி, ஐந்து, ஒன்று, ஓணாண், ஒளவை - இவை உயிர்முதல் எழுத்துகளாக அமைந்தன.

ii) கலம், ஙனம், சங்கு, ஞமலி, தமிழ், நலம், பழம், மலர், யவனம், வளம் இச்சொற்களில் மெய்கள் முதலில் நிற்பதால் மெய்முதலாகும்.

[“பன்னீ ருயிரும் கசதந பமவய ஞங ஈரைந்து உயிர்மெய் மொழிமுதல்” என்பது நன்னூல் நூற்பா (102)].

3. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் இருபத்து நான்கு. அவை, உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொன்று, குற்றியலுகரம் ஒன்று ஆக இருபத்து நான்கு ஆகும்.

(Mar.-24)

எ - டு:

 i) தமிழ் - ஈற்றெழுத்து 'ழ்' மெய்யீறு.

ii) கிளி - ஈற்றெழுத்து 'ளி' (ள் + இ); எனவே, உயிரீறு.

iii) ஆறு - ஈற்றெழுத்து 'று', குற்றியலுகரம்; எனவே, குற்றியலுகர ஈறு.

[“ஆவி ஞணநமன யரலவ ழளமெய் சாயும் உகரம் நாலாறும் ஈறே” என்பது நன்னூல் நூற்பா (107)].

(ஆவி - உயிரெழுத்து. சாயும் உகரம் -குற்றியலுகரம்.)

4. உயிரீறு, மெய்யீறு விளக்குக.

(Mar.-20, 23)

உயிரீறு:

சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் உயிரெழுத்து அமைவது உயிரீறு.

எ.கா : அருவி (வ்+இ), மழை (ழ்+ஐ) - இ, ஐ என்னும் உயிர் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன.

மெய்யீறு

சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் மெய் எழுத்து அமைவது மெய்யீறு.

எ கா : தேன் (ன்), தமிழ் (ழ்) - ன், ழ் என்னும் மெய் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன.

5.உயிர்முதல், மெய்ம்முதல் -எடுத்துக்காட்டுடன் விவரிக்க.

(May-22)

உயிர்முதல்

சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் உயிர் எழுத்து வருவது உயிர்முதல் ஆகும்.

கா : அம்மா (அ), ஆடு (ஆ), ஐவர் (ஐ), ஔவையார் (ஔ)- முதலில் உயிர் எழுத்துகள் வந்ததால் உயிர் முதலாகும்.

மெய்ம்முதல்

சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து எழுத்துகளில் ஒன்று, முதலில் வருவது மெய்ம்முதலாகும்.

எ கா

: கதவு (க் + அ = க), சங்கு (ச் + அ = ச), பந்து (ப் + அ = ப) மெய்யெழுத்துகள் முதலில் வந்தன.

தமிழாக்கம் தருக

1. The Pen is mightier than the Sword

எழுதுகோலின் முனை, வாளின் முனையைவிட வலிமையானது.

2. Winners don't do different things, they do things differently.

வென்றோர், வேறுபட்ட செயல்களைச் செய்வதில்லை; அவர்கள் செயல்களை வேறுவிதமாகச் செய்வார்கள்.

3. A picture is worth a thousand words.

ஒரு படம் என்பது, ஆயிரம் வார்த்தைகளைவிட மதிப்பு உள்ளது.

4.Work while you work and play while you play.

உழைக்க வேண்டிய நேரத்தில் உழை! விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடு!

5.Knowledge rules the world.

அறிவே உலகை ஆளுகிறது.

பேச்சுவழக்கை எழுத்துவழக்காக மாற்றுக.

அ) காலங்காத்தால எந்திரிச்சிப் படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும். அதிகாலையில் எழுந்திருந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்

ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது. முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வராமல் போகாது.

இ) காலத்துக்கேத்த மாரிப் புதுசுபுதுசா மொழி வடிவத்த மாத்தனும்.

காலத்திற்கேற்ற மாதிரி புதிது புதிதாக மொழிவடிவத்தை மாற்ற வேண்டும்.

ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமாப் பதிய வைக்கனும்.

ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எல்லாவற்றையும் கவனமாகப் பதியவைக்க வேண்டும்.

உ) தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும். தேர்வெழுத வேகமாகச் செல்லுங்கள்; நேரம் கழித்துப் போனால் பதற்றமாகிவிடும்.