குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை வரைக.



தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

                 “தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"

                                என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

கன்னித்தமிழ்:

”முந்தை மொழிகளில் மூத்தவளே

    என் மூளை நரம்பினை யாத்தவளே”

     தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் தொடங்கி,தற்கால உரைநடை மற்றும் துளிப்பா வரை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இலக்கிய வடிவங்களில்,பல்வேறு பொருட்களைக் கொண்டு, எண்ணிலடங்கா நூல்களை இயற்றி,தமிழன்னைக்குச் சூட்டி,தமிழ் மொழியைக் கன்னித்தமிழாய் வைத்திருப்பதற்கு தமிழராகிய நாம் பெருமைப்பட வேண்டும்.

சிற்றிலக்கிய வடிவங்கள்:

    தமிழகத்தில், நாயக்கர் ஆண்ட காலப்பகுதியை சிற்றிலக்கிய காலம் என்பர். ஏனெனில், அக்கால கட்டத்திலேயே சிற்றிலக்கிய வடிவங்கள் பல உருவாகி, நூல்கள் தோன்ற ஆரம்பித்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை பிள்ளைத்தமிழ், சதகம், பரணி, கலம்பகம், உலா அந்தாதி, கோவை முதலான சிற்றிலக்கிய வடிவங்கள் ஆகும்.

பிள்ளைத்தமிழ்:

குழவி மருங்கினும் கிழவதாகும்   - தொல்காப்பியர்

     கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மற்றும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஒப்பற்ற பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

சதகம்:

    நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.

பரணி:

                     "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"

       என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.

கலம்பகம்:

      18 உறுப்புகளைக் கொண்டு, அகம் புறம் என இரண்டும் கலந்து பாடுவது கலம்பகம் ஆகும்.  பல்வேறு பாவினங்கள் கலந்துபாடுவது கலம்பகம்.கலம்பகம்என்பதில்,கலம் என்பது பன்னிரண்டையும், பகம் என்பது ஆறையும் குறிக்கும். நந்திக்கலம்பகம் முதற் கலம்பகம் ஆகும்.

உலா:

                      ” ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப"

    இதனை தொல்காப்பியம் என்று குறிப்பிடப்படுகிறது. மன்னர்கள் உலா வரும்போது ஏழு பருவ மகளிரும், அவரைக் கண்டு அவர் மீது பற்று கொண்டு மயங்குவதாக பாடுவது உலா. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கயிலாய ஞானஉலா தமிழில் தோன்றிய முழுமை பெற்ற முதல் உலா நூலாகும்.

அந்தாதி:

     அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.

கோவை:

       பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.

முடிவுரை:

        "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்.