குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்றை எழுதி தலைப்பு தருக. முன்னுரை- தமிழன் அறிவியலின் முன்னோடி- விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்- விண்ணியல் அறிவில் நமது கடமை- முடிவுரை.

தலைப்பு: விண்ணியல் அறிவு (விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்)

முன்னுரை:

”எங்களுக்கு நிலாச்சோறு சாப்பிடவும் தெரியும்

நிலாவுக்கே போய் சோறு சாப்பிடவும் தெரியும்”

      தமிழர் அறிவியலை நான்காம் தமிழாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள் இருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழரின் விண்ணியல் அறிவாகும்.இன்றளவில் நிகழ்த்தப்பெறும் பல விண்ணியல் ஆய்வுகளுக்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற கருத்துக்கள் முன்னோடியாகத் திகழ்வதை யாராலும் மறுக்க இயலாது.

தமிழன் அறிவியலின் முன்னோடி:

       தமிழர் பழங்காலத்தில் தங்கள் வாழ்வியலோடு அறிவியலையும் இணைத்துக் கொண்டவர்கள்.சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன. பெருவெடிப்புக் கொள்கையை பற்றி இன்றைய அறிவியல் கூறும் கருத்துகளை சங்ககால இலக்கியங்களில் நமது முன்னோர்கள் கூறியிருப்பது வியப்பான ஒன்று.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

          கருவளர் வானத்து இசையில் தோன்றி"

      எனத்தொடங்கும் பரிபாடலில் புலவர் கீரந்தையார் அண்டத்தின் தோற்றம் குறித்து, இன்றைய அறிவியல் கூறும் கருத்துக்களில் அனைத்தையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 ல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தார்.ஆனால் 1300ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர் தான் இயற்றிய திருவாசகத்தில், திருஅண்டப் பகுதியில் 100 கோடிக்கும் மேலான பால் வீதிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

”கைகளை நீட்டிப்பார் ஆகாயம் உன்கைகளில்

            முயற்சிகளைச் செய்துபார் ஆகாயம் உன் காலடியில்”

      விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

           1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம்செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார்.


நமது கடமை:                                                     

                   ”அறிவியல் எனும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்

                   கரிகாலன் தன் பெருமையெல்லம் கணினியுள்ளே பொருத்துங்கள்”     - வைரமுத்து

        அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது. விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும். விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும்  அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது. அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்

முடிவுரை:

       "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.